பிரிட்டிஷ் கொலம்பியாவில் இன்று முதல் புதிய குறைந்தபட்ச ஊதியம் அமுல்
ஜூன் 1ம் திகதி முதல் கனடாவில் மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியம் கொண்ட மாகாணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாற உள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 15.20 டொலர் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி மதுபான விடுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த குறைந்தபட்ச ஊதியம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய மாகாணங்களை பொறுத்தமட்டில், இதுவே மிக அதிகமான குறைந்தபட்ச ஊதியமாகும். இருப்பினும் Nunavut பிராந்தியத்தில் குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 16 டொலர் என வழங்கி வருகின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவை பொறுத்தமட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியமானது மணிக்கு 11.35 டொலரில் இருந்து தற்போது 15.20 டொலராக உயர்ந்துள்ளது.
மேலும், மதுபான சேவை பிரிவில் பணியாற்றுபவர்களில் 80% பேர் பெண்கள் என்ற நிலையில், தற்போது கொண்டுவரப்பட்ட இந்த மாறுதலானது பாலின ஊதிய இடைவெளியை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.