நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தவறான தகவல்... மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!
இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தவறான தகவல் வெளியிட்டதற்காக ‘மெட்டா’ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
'முகநூலை நடத்தி வரும் 'மெட்டா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், அண்மையில் ஒரு பேட்டி அளித்திருந்தார்.
அதில், ''கொரோனா பரவலுக்கு பிறகு 2024-ம் ஆண்டு இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் ஆளுங்கட்சிகள் தோல்வி அடைந்தன'' என்று அவர் கூறியிருந்தார்.
அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி 3-வது தடவையாக ஆட்சியை பிடித்தார் என்றும், எனவே, மார்க் ஜுக்கர்பெர்க் கூறியது தவறான கருத்து என்றும் அவர் கூறினர்.
இவ்வாறான நிலையில், 'மெட்டா' நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் சிவநாத் துக்ரால், மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துக்காக மன்னிப்பு கோரினார்.
இது தொடர்பாக இந்திய துணைத்தலைவர் சிவநாத் துக்ரால் கூறுகையில்,
கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தியா தொடர்ந்து எங்களது முக்கியமான நாடாக இருக்கும்" என கூறியுள்ளார்.