வடகொரியா மீது பாய்ந்த அமெரிக்க நடவடிக்கை: வெளியான காரணம்
தொடர் ஏவுகணை சோதனையை முன்னெடுத்துவரும் நிலையில், வடகொரியாவின் 5 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மார்ச் மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணை சோதனையானது வட கொரியாவின் மிகப்பெரிய ஆயுத சோதனைகளில் ஒன்று என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த ஏவுகணை தயாரிப்பில் உடந்தையாக இருந்த 5 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜப்பானும் குறித்த ஏவுகணை சோதனை தொடர்பாக 4 குழுக்கள் மற்றும் 9 தனிப்பட்ட நபர்கள் மீது தடைகளை விதித்திருந்த நிலையிலேயே அமெரிக்காவும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையானது பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் கருவூல செயலாளர் ஜேனட் யெலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.