காணாமல் போன இளைஞர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு
வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா வனப்பகுதியில் காணாமல் போயிருந்த 22 வயது இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபோர்ட் நெல்சன் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞரின் நலன் குறித்து விசாரிக்குமாறு செவ்வாய்க்கிழமை பிற்பகல் நார்தர்ன் ராக்கீஸ் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறையினரும் மோப்ப நாய்ப் பிரிவினரும் உடனடியாகத் தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு இருட்டும் வரை தேடுதல் நடத்தப்பட்டு, மறுநாள் புதன்கிழமை அதிகாலை மீண்டும் பணிகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், புதன்கிழமை காலை 10:30 மணியளவில் மஸ்க்வா ஆற்றங்கரைக்கு அருகே உள்ள கரடுமுரடான பாதையில் அந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் மோப்ப நாய்ப் பிரிவினரால் கண்டெடுக்கப்பட்டார்.
"இந்த இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன், தேடுதல் பணியில் அயராது உழைத்த அதிகாரிகள், அவசரகால மீட்புக்குழுவினர் மற்றும் துணை நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என நார்தர்ன் ராக்கீஸ் காவல்துறை அதிகாரி ஜேசன் ரம்மிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞரின் மரணத்திற்கான காரணம் குறித்து பிரிட்டிஷ் கொலம்பியா மரண விசாரணை சேவை விசாரணை நடத்தி வரும் நிலையில், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞரின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேலதிக விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.