உலகளாவிய ரீதியில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கையில் உயர்வு
உலகளவில் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இது 70% அதிகரித்துள்ளதாகவும், மோதல்கள், பெருமளவு குடியேற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
2024 இறுதி வரையில் 2,84,400 பேர் காணாமல் போனவர்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது 2019ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 68% அதிகரிப்பு ஆகும். “சூடான் முதல் உக்ரைன் வரை, சிரியா முதல் கொலம்பியா வரை — இந்த எண்ணிக்கைகள் போரின்போது பொதுமக்களை பாதுகாக்கத் தவறும் தரப்புகளை வெளிப்படுத்துகின்றன” என்று ஐசிஆர்சி தலைவர் பியர் கிரேஹன்பூல் கூறினார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் தங்கள் அன்பிற்குரியவர்களை பல ஆண்டுகளாக இழந்துள்ளனர்.
அவர்களின் வேதனை கணக்குகளில் அடங்காது என குறிப்பிட்டுள்ளார்.
போர்சட்டங்களின் அடிப்படையில், பொதுமக்களை பிரிப்பதைத் தவிர்க்கவும், கைதிகளின் தகவல்களை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும், உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிடவும் அரசாங்கங்கள் மற்றும் போர்களில் ஈடுபடும் தரப்பினர் பொறுப்பு உடையவை என சர்தேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2024இல் மட்டும் 16,000க்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டு, 7,000க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்.