கனடா தீ விபத்து: முதியவர் பலியானதைத் தொடர்ந்து அவரது மனைவியும் பலி!
கனடாவின் வடகிழக்கு எட்மண்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளதாக எட்மண்டன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த 82 வயதுடைய அந்த மூதாட்டி, இந்த தீ விபத்தில் ஏற்கனவே பலியான 85 வயது முதியவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட போது, அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே குதித்ததில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயிருந்த மற்றொரு நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, 82-வது தெரு மற்றும் 132-வது அவென்யூ சந்திப்பில் உள்ள இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
இந்த மோதலின் போது அங்கிருந்த எரிவாயு குழாய் உடைந்ததால், பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் தீப்பிடித்தது.
இந்த திடீர் வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த குடியிருப்பாளர்கள் 6 பேரும், காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த தம்பதியினரை நினைவு கூரும் வகையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே ஆண் மற்றும் பெண் உருவங்கள் அடங்கிய சிறிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விபத்து ஏற்படுவதற்கான முழுமையான பின்னணி குறித்து புலனாய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தீயணைப்புப் படையினருடன் இணைந்து கட்டடத்திற்குள் பாதுகாப்பாகச் சென்று தேடுதல் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.