அமெரிக்க தேசிய கொடிகளை அகற்றும் மிசிசாகா – மேயர் பாரிஷ் விளக்கம்
கனடாவின் மிசிசாகா நகரம் பல பொது இடங்களில் காணப்பட்ட அமெரிக்க தேசிய கொடிகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது பலரின் கோரிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டதாக நகர மேயர் கேரோலின் பாரிஷ் தெரிவித்தார்.
மேயர் பாரிஷ் X (முன்னாள் Twitter) தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட தகவலில், விளையாட்டு அரங்குகள், ஓன்டாரியோ ஏரிக்கு அண்மித்த இடங்கள் மற்றும் Port Credit பகுதியில் உள்ள Snug Harbour பியர் ஆகிய இடங்களில் அமெரிக்க கொடிகள் அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், பெரிய கனேடிய கொடிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன, அவை நகர மன்றம் (City Hall) கொடி தூண்களில் நிறுவப்படும் என்றும் கூறினார்.
இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தக போரின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராக கடுமையான வரிகளை (tariffs) விதித்து வருகின்றார்.
இதன் பாதிப்பு, மிசிசாகா நகரத்தில் 6 லட்சம் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிசிசாகா ஒரு தொழில்துறை மற்றும் வர்த்தக மையமாக உள்ளதால், இந்த வரிகள் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என பாரிஷ் எச்சரித்தார்.
அமெரிக்கா அல்லாத (Non-U.S.) மற்றும் கனேடிய உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வகையில் கொள்முதல் நடைமுறையில் நகர நிர்வாகம் திருத்தம் செய்துள்ளது.
அமெரிக்க சந்தையை தவிர்த்து புதிய சர்வதேச சந்தைகளை உருவாக்க நகரம் ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மிசிசாகா நகர மேயர் பாரிஷ் அறிவித்துள்ளார்.