ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல் நிலை குறித்து முக்கிய புள்ளி வெளியிட்ட தவகல்
'ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நலமுடன் இருக்கிறார். அவர் நாட்டின் அன்றாட விவகாரங்களை கவனித்து வருகிறார்,'' என, அவரது அலுவலகத்தின் மூத்த அதிகாரியும், சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணை தலைவருமான அயதுல்லா மொஹ்சென் கோமி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது, முதல் நாள் நடந்த வான்வழி தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

உடல்நலம்
இதில், கமேனியின் மகனும், தற்போதைய உச்ச தலைவருமான மொஜ்தபா கமேனி படுகாயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி அயதுல்லா மொஹ்சென் கோமி கூறியதாவது: தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன், கட்டடத்தின் முற்றத்துக்கு சென்றதால் மொஜ்தபா உயிர் தப்பினார்.
அவரது உடல்நலம் குறித்து பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அவர் நலமாக இருக்கிறார். பொது வெளியில் வராவிட்டாலும், முக்கியமான பேச்சு மற்றும் நாட்டின் கள நிலவரங்கள் மற்றும் நடவடிக்கைகளை அவர் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
அமைதி பேச்சுக்கான குழுவிற்கு தேவையான ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் அவர் பிறப்பித்து வருகிறார். இத்தகைய வதந்திகளை எதிரிகள் பரப்பி வருகின்றனர். இதன் வாயிலாக அவர்கள் சதி திட்டங்களை முன்னெடுக்க பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப், மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை என, சமீபத்தில் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே, மொஜ்தபா குறித்து அவரது அலுவலக மூத்த அதிகாரி இவ்வாறு பேசி உள்ளார்.