மொனாக்கோ குண்டுவெடிப்பு ; தேடப்பட்டு வந்த உக்ரைன் பெண் சடலமாக மீட்பு
மொனாக்கோவில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அனஸ்தாசியா பெரெசோவ்ஸ்கா, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வரிச் சலுகைகள் மற்றும் 'பார்முலா 1' கார் பந்தயங்களுக்குப் பெயர் போன உலகப் பணக்காரர்களின் புகலிடமான மொனாக்கோவில், உக்ரைன் தொழிலதிபர் வாடிம் எர்மோலேவ் (Vadim Ermolaev) என்பவரைக் குறிவைத்து அண்மையில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

உக்ரைன் இராணுவ உளவு அதிகாரி
இச்சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் தொடர்புடையதாக அனஸ்தாசியா பெரெசோவ்ஸ்காவை உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர் உக்ரைனில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உதவியோடு அனஸ்தாசியாவைத் தாமே கொலை செய்ததாக உக்ரைன் இராணுவ உளவு அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார் என கூறப்படுகின்றது.
மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், தனிப்பட்ட சொந்த முடிவின் காரணமாகவே இந்த கொலையைச் செய்ததாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார், எனவும் உக்ரைன் அரசுத் தரப்பு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக உக்ரைன் மற்றும் மொனாக்கோ பாதுகாப்புத் துறையினர் தீவிர மேல் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.