கனடா அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் புகுந்த குரங்கு அம்மை!
உலகில் பல உயிர்களை காவு கொண்ட கொரோனா வடுவே முழுமையாக ஆறாத நிலையில், தற்போது புதியதாக குரங்கு அம்மை நோய் பல நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகின்றது.
அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த குரங்கு அம்மை நோய், தற்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே மாதத்தின் தொடக்கத்திலிருந்தே, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நோயினால் ஸ்பெயின், போர்துகல் ஆகிய நாடுகளிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேவேளை கனடாவில் 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
குரங்கு அம்மை என்பது ஒரு அம்மை வைரஸால் ஏற்படும் அரிதான தொற்று ஆகும். இது வேரியோலா வைரஸின் அதே குடும்பம் மற்றும் வகையைச் சேர்ந்தது.
இந்த தொற்று ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, தசை வலிகள், சோர்வு மற்றும் வீங்கிய நிணநீர் மண்டலங்களின் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
அத்துடன் தடிப்புகள் பின்னர் முகத்தில் தோன்றும் மற்றும் உடல் முழுவதும் பரவி, இறுதியில் நிறமாற்றம், கொப்புளங்கள், சிரங்குகள் மற்றும் தோலில் உயரமான புடைப்புகள் ஆகியவற்றை உருவாக்குகிறதாகவும் கூறப்படுகின்றது.