கனேடிய சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திருப்பதற்காக அமெரிக்க மாகாணம் அளிக்கும் சலுகை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணம் என கூறி வம்புக்கிழுத்ததாலும், தொடர்ந்து கூடுதல் வரிகள் விதித்துவருவதாலும் கோபமடைந்த கனேடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாவை புறக்கணித்துவருகிறார்கள்.
2023ஆம் ஆண்டில் 20,514,314 கனேடிய சுற்றுலாப்பயணிகள் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

ஆனால், 2024 ஜூன் மாத நிலவரத்தை ஒப்பிடும்போதே, 2025 ஜூனில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற கனேடியர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆக, கனேடியர்கள் அமெரிக்க சுற்றுலாவைப் புறக்கணிப்பதன் பாதிப்பை அமெரிக்க சுற்றுலாத்தலங்கள் அனுபவித்துவருகின்றன.
இந்நிலையில், மீண்டும் கனேடிய சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திருப்பதற்காக கனடா எல்லைக்கு அருகிலிருக்கும் அமெரிக்க மாகாணமான Montana புதிய முயற்சி ஒன்றைத் துவக்கியுள்ளது.
Discover Kalispell என்னும் அமெரிக்க சுற்றுலா நிறுவனம், Kalispell Canadian Welcome Pass என்னும் பாஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அந்த பாஸ் மூலம் சுற்றுலா வரும் கனேடியர்களுக்கு பல தள்ளுபடிகள், சிறப்பு சலுகைகளை வழங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் கனேடியர்களுக்காக வெளியிட்டுள்ள செய்தியில், ‘ we see you and we miss you’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கனேடியர்களை ஈர்க்க செய்த விளம்பரங்களின் விளைவாக சென்ற ஆண்டு கலிபோர்னியாவுக்கு சுற்றுலா சென்ற கனேடியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், Montana மாகாணமும் கனேடிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க இந்த புதிய முயற்சியைத் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.