கனடாவில் 15 சிறுவர்களைக் கைது செய்த பொலிஸார்: எதனால் தெரியுமா?
கனடாவின் மொன்றியல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நகைக்கடைக் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் பாரிய நடவடிக்கையின் ஒரு கட்டமாக, மொன்றியல் பொலிஸார் சுமார் 15 பதின்ம வயதுச் சிறுவர்களைக் கைது செய்துள்ளனர்.
இதன் மூலம், இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இவர்களுக்குத் தங்கத்தை மீள்விற்பனை செய்யும் சந்தையுடன் தொடர்புகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் மொன்றியல் பகுதியிலுள்ள நகைக்கடைகளில் பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொன்றியல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 55 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் 34 கொள்ளைகள் ஒரே மாதிரியான 'கண்ணாடிகளை உடைத்து நகைகளை அள்ளிச் செல்லும்' பாணியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரிப்பு மற்றும் குற்றவியல் கும்பல்கள் சிறுவர்களைத் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதுமே இத்தகைய கொள்ளைகள் அதிகரிக்கக் காரணம் எனப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவங்களைப் பின்னணியில் இருந்து வழிநடத்தும் முக்கிய சூத்திரதாரிகளை அடையாளம் காண மொன்றியல் பொலிஸார் பாரிய வளங்களை ஈடுபடுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 'ரோப்லாக்ஸ்' மற்றும் 'மைன்கிராஃப்ட்' போன்ற வீடியோ கேம் தளங்கள் ஊடாகக் குற்றவியல் கும்பல்கள் பதின்ம வயதுச் சிறுவர்களைத் தமது வலையில் வீழ்த்தி இச்செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.