கனடாவில் இந்த வகை இனிப்புப் பண்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவில் பக்லவா என்ற பேஸ்ட்ரி இனிப்பு பண்ட வகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பரவியுள்ள சால்மொனெல்லா தொற்று தொடர்பான தேசிய விசாரணையின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ மாகாணம் லண்டன் நகரில் விற்கப்பட்ட இந்த வகை சில இனிப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
எச்சரிக்கை
ஜுனைத் ஸ்வீட்ஸ் (Jnaid Sweets) நிறுவனம் தயாரித்த “கிளாசிக் பக்லவா,” “துருக்கி வகை பக்லவா,” “பிஸ்தா ஃபிங்கர்ஸ்,” மற்றும் “கிரவுன்ஸ் கிங்” ஆகிய இனிப்புகள் இவ்வாறு திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த நவடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிப்புகள் மே 15 முதல் ஜூலை 30 வரை லண்டன் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஜுனைத் ஸ்வீட்ஸ் என்ற இனிப்புப் பண்ட விற்பனை நிலையத்தில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றின் முக்கிய பொருளான பிஸ்தா தற்போது சால்மொனெல்லா பரவலுக்குக் காரணமாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மீளப்பெறல் அறிவிப்பு விடுக்கப்பட்ட பிஸ்தா மற்றும் பிஸ்தா சேர்க்கப்பட்ட பொருட்களை உண்ணவும், விற்கவும், வழங்கவும் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சால்மொனெல்லா தொற்று குறித்த 62 சம்பவங்கள் ப்ரிட்டிஷ் கொலம்பியா, மானிடோபா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் பதிவாகியுள்ளன.