திரை நேரம் குழந்தைகளின் கல்விச் செயல்திறனை பாதிக்கலாம் — கனடிய ஆய்வு எச்சரிக்கை
புதிய கனடிய ஆய்வு ஒன்றில் குழந்தைகளின் அதிக திரை நேரம் மற்றும் குறைந்த கல்விச் செயல்திறன் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளது.
டொராண்டோவின் புனித மைக்கல் மருத்துவமனை மற்றும் சிறுவர் மருத்துவமனை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு 2008 முதல் 2023 வரை 15 ஆண்டுகள், ஒன்டாரியோவில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
கற்றலுக்கு இடையூறு
பெற்றோர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், அவர்கள் தொலைக்காட்சி, வீடியோ கேம்கள், கணினி மற்றும் டேப்லெட்டுகளில் செலவிட்ட நேரம் கணக்கிடப்பட்டது.
அந்த தரவுகள் ஒன்டாரியோ கல்வித் துறையின் EQAO நிலையான தேர்வு மதிப்பெண்களுடன் ஒப்பிடப்பட்டன.
ஒவ்வொரு கூடுதல் மணி நேர திரை நேரத்திற்கும், வாசிப்பு மற்றும் கணிதத்தில் நிலையான தரத்தை அடைவதற்கான வாய்ப்பு சுமார் 10% குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வு முடிவுகள் அதிக திரை நேரம் கவனம் செலுத்தும் திறனை பாதிக்கக்கூடும் என்பதையும் வெளிப்படுத்தியது. “திரை நேரம் நமது கவனத்தை குறுகிய இடைவெளிகளில் செயல்பட பழக்கப்படுத்துகிறது.
இது ஆழமான சிந்தனைக்கும் கற்றலுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது என ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் கல்வி கொள்கை ஆய்வாளர் டாக்டர் சச்சின் மகாராஜ் (Dr. Sachin Maharaj) தெரிவித்துள்ளார்.