ஒன்டாரியோவில் மீண்டும் குளிர்கால புயல்

Kamal
Report this article
ஒன்டாரியோ மாகாணத்தில் பல பகுதிகளில் மீண்டும் கடும் குளிர்கால வானிலை தாக்கம் ஏற்பட்டு, பல வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இதில், டொராண்டோவில் உள்ள நெரிசல் மிக்க வீதியொன்றில் ஆறு வாகனங்கள் சிக்கிய பெரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
என்விரோன்மென்ட் கனடா, டொராண்டோ, லண்டன் மற்றும் தெற்கு ஜார்ஜியன் பே வளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த பகுதிகளில் அதிகபட்சம் 5 செ.மீ. வரையிலும், ஓவன் சவுண்டிற்கு கிழக்கிலுள்ள பகுதிகளில் 10 செ.மீ. வரை பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை வேளையில் பயணிக்க வேண்டியவர்கள் மெதுவாகவும், எச்சரிக்கையோடும் வாகனங்களை செலுத்த வேண்டுமென பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர், ஏனெனில் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டொராண்டோவில், இன்று அதிகாலை டான் வாலி பார்க்வே (Don Valley Parkway) சாலையின் தெற்குப் பகுதியிலேயே 6 வாகனங்கள் சிக்கிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் 30 அன்று ஏற்பட்ட பனிப் புயலுக்குப் பின்னும், Hydro One நிறுவனத்தின் 35,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இன்னும் மின் இணைப்பு இல்லாமல் தவிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.