கனடாவில் இந்தப் பகுதியில் காட்டுத்தீ எச்சரிக்கை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள கிம்பர்லி நகரின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாடன்றி வேகமாகப் பரவி வருவதால், நகர் முழுவதற்கும் வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகர எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையால், சுமார் 9,000 குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தவிர, நகருக்கு தென்மேற்கே உள்ள ‘சென்ட் மேரி லேக்’ வீதியிலுள்ள 66 குடியிருப்புகளுக்கும் தனியாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை கண்டறியப்பட்ட இத்தீ, பலத்த காற்று மற்றும் காய்ந்த மரங்கள் காரணமாக மிக வேகமாகப் பரவி, சுமார் 567 ஹெக்டேர் பரப்பளவை எட்டியுள்ளது.
முறையே 250 ஹெக்டேர் மற்றும் 30 ஹெக்டேர் பரப்பளவில் மேலும் இரு காட்டுத்தீக்கள் பரவி வருகின்றன.
பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவை அமைப்பின் தகவல்படி, இந்த மூன்று காட்டுத்தீக்களும் செங்குத்தான மலைப் பகுதிகளில் எரிந்து வருவதால், தீயணைப்பு வீரர்கள் நேரடியாகச் சென்று தீயை அணைப்பது பாதுகாப்பற்றதாக உள்ளது.
காட்டுத்தீயின் நகர்வுகள் வான்வழியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 3 ஹெலிகாப்டர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கனரக இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.