மொராக்கோவின் முதல் பெண் பிரதமர் நியமனம்
மொராக்கோ நாட்டின் புதிய பிரதமராக, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த பாத்திமா ஜஹ்ரா மன்சூரியை (50) அந்நாட்டு அரசா் முகமது நியமித்துள்ளாா்.
இதன்மூலம், இஸ்லாமிய நாடான மொராக்கோவில் பிரதமராகப் பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற வரலாற்றுச் சிறப்பை இவா் பெற்றுள்ளாா்.

மேலும், துனிசியாவின் நஜ்லா பெளடனுக்கு அடுத்தபடியாக, அரபு நாடுகளில் பிரதமா் பதவியை ஏற்கும் 2-ஆவது பெண் இவராவாா். மொராக்கோ தோ்தல் நடைமுறைப்படி எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைப்பது கடினமாகும்.
அதேநேரம் கடந்த 2011 அரபு வசந்தக்கால போராட்டத்தின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, தோ்தலில் அதிக இடங்களை வெல்லும் கட்சியிலிருந்தே பிரதமரை அரசா் நியமிக்க வேண்டும்.
அதன்படி, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், அதிக வாக்குகளைப் பெற்ற பாத்திமா ஜஹ்ரா மன்சூரியின் ‘பிஏஎம்’ கட்சியைப் புதிய அரசு அமைக்க அரச மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்த சில நாள்களில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, பாத்திமா ஜஹ்ரா மன்சூரி புதிய அரசை அமைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பாத்திமா ஜஹ்ரா மன்சூரி தலைமையிலான புதிய அரசு, நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஊதிய உயா்வு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுடன் 2030 ஃபிபா உலகக் கோப்பைக்கு நூற்றுக்கணக்கான கோடி டாலா் முதலீடுகளையும் முன்னெடுக்க வேண்டிய பெரும் பொறுப்புகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.