கனடாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: 47 வயது நபர் உயிரிழப்பு
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் மிடில்டன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் இந்த விபத்து தொடர்பாக அவசர மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்கூல் ஸ்ட்ரீட் பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஹூண்டாய் சோனாட்டா காரும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மிடில்டனைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அதேவேளை, ஹூண்டாய் சோனாட்டா காரின் சாரதிக்கும் அதில் பயணித்த மற்றொரு நபருக்கும் எவ்வித உடல் காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் விபத்து விசாரணை நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததால், ஸ்கூல் ஸ்ட்ரீட் பல மணி நேரங்கள் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்தது.
இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் அல்லது சம்பவம் பதிவாகிய டாஷ் கேம் காணொளிகள் வைத்திருப்பவர்கள் 902-825-2000 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.