சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு
அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று சனிக்கிழமை (16) திறக்கப்பட்டது.
இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர 'தமிழர் நினைவுத் தூபி' ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழர் இன அழிப்பு நினைவுத் தூபி திறப்பு நிகழ்வு இன்று காலை 9.45 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்துவைத்தார்.
சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் ஆதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது. 'தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - சிட்னி' அமைப்பின் ஏற்பாட்டில் சிட்னியில் உள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஒத்துழைப்போடும் இந்நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உருவாக்கப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, வெறும் கற்களாலும் சிலைகளாலும் ஆன ஒரு கட்டமைப்பு அல்ல. அது தமிழர் இனத்தின் துயர வரலாறு, போராட்ட நினைவு, இன அழிப்பு வேதனை மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான அழைப்பின் அடையாளமாக திகழ்கிறது.
உலகம் முழுவதும் பரவி வாழும் ஈழத் தமிழர்களுக்கு, முள்ளிவாய்க்கால் என்பது ஒரு புவியியல் இடம் மட்டுமல்ல. அது அழிக்கப்பட்ட ஈழ தமிழ் உறவுகளின் உயிர்களின் சாட்சியமும், மறக்க முடியாத வரலாற்றுக் காயமும் ஆகும்.