என் மனது உடைந்துவிட்டது; வில் ஸ்மித் உருக்கம்!
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக்கை(Chris Rock) தாக்கியதை தொடர்ந்து, ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாதெமியிலிருந்து வில் ஸ்மித்(Will Smith) விலகியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாதெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன்.உரிய நடவடிக்கை எது எடுத்தாலும் அதை ஏற்று கொள்வேன்.
அகாதெமியின் 94ஆவது விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நான் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் மன்னிக்க முடியாததாகவும் மிகுந்த வலி தருகிற ஒன்றாகவும் இருந்தது.
கிரிஸ்(Chris Rock), அவரின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள், நெருக்கமானவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், வீட்டிலிருந்து நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்கள் என என்னால் புண்பட்டு நிற்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அகாதெமியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டேன். சிறப்பான பணியாற்றி விருதுக்கு பரிந்துரையானவர்கள், வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் கொண்டாடுவதற்கான வாய்ப்பை பறித்துவிட்டேன். என் மனது உடைந்துவிட்டது.
இதன்படி சாதனை புரிந்துள்ளவர்கள் அதற்கான அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதிலும் திரைப்படத்துறையில் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை அங்கீகரித்துவரும் அகாதெமி அதன் சிறப்பான பணிக்கு திரும்புவதிலும் நான் கவனம் செலுத்த போகிறேன்" என்றார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச்-28ஆம் திகதி நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தைக்(Jada Pinkett Smith) கிண்டலடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை(Chris Rock) மேடையில் ஏறி அறைந்தார் வில் ஸ்மித்(Will Smith).
அலோபீசியா பாதிப்பு காரணமாக தலைமுடி கொட்டி வந்ததால் மொட்டை அடித்திருந்தார் ஜாடா(Jada Pinkett Smith) . இதுபற்றி பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஆஸ்கர் விருது விழா மேடையில், ஜி ஐ ஜேன் படத்தைக் குறிப்பிட்டு (1997-ல் வெளியான படம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்(Chris Rock) , ஜாடாவைக் கிண்டலடித்தார்.
இதைக் கேட்டு கடுப்பான வில் ஸ்மித்(Will Smith), மேடையிலேயே கிறிஸ் ராக்கை (Chris Rock) அறைந்து, இனிமேல் என் மனைவியின் பெயரை நீ கூறக்கூடாது என்று உரத்த குரலில் கூறினார். இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.