திருமண மண்டபம் மீது தாக்குதல்கள் ; பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
மியான்மரில் நடைபெற்ற வான்வழித் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு மியான்மர். அங்கு, 2021 ஆம் ஆண்டில் ஆங் சான் சூகியின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பதவியிலிருந்து நீக்கி, ராணுவ புரட்சி ஏற்பட்டது.

போரினால் மிகவும் பாதிப்புக்குள்ளான இந்நாட்டில், அப்போது முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நேற்று (நவ. 28) மியான்மரில் வான்வழித் தாக்குதல் மூலம் ஒரு திருமண மண்டபம் மற்றும் சந்தையின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில், பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுமக்களின் மீது வேண்டுமென்றே இந்தத் தாக்குதலை ராணுவம் நடத்தியதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
மியான்மரில் போர் விமானங்களை வைத்திருக்கும் ஒரே ஆயுதப் படையான மியான்மர் ராணுவத்தினரிடம் இந்தச் சம்பவம் குறித்து கருத்து கேட்கத் தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டில் ராணுவ அடக்குமுறையின்போது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்றத்காக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு வாரத்திற்குப் பின் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.