புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிலிப்பின்ஸில் மர்ம குண்டு வெடிப்பு ; 22 பேர் படுகாயம்
பிலிப்பின்ஸ் நாட்டில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் வீசிய கையெறி குண்டு வெடித்து 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு பிலிப்பின்ஸின் கோட்டாபாட்டோ மாகாணத்தின் மாத்தளம் நகரத்தில் உள்ள நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை (2026.01.01) அதிகாலை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தினுள் கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சில நொடிகளில் அந்த வெடிகுண்டு வெடித்து சிதறி 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பின்னர், படுகாயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க பிலிப்பின்ஸ் காவல் துறையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிலிப்பின்ஸ் நாட்டின் லூசோன் தீவில், கடந்த டிசம்பர் மாதம் கண்ணிவெடித் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.