மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் புதிய படைப்பு
மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) விண்கலத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களும், கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விண்வெளி வீரர்கள் நிலவை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொரு நொடியையும் துல்லியமாகப் பதிவு செய்ய இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரியன் (Orion) விண்கலத்தில் மொத்தம் 28 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்கலத்தின் உட்புறம், வெளிப்புறம் மற்றும் விண்வெளி வீரர்களின் கைகளிலும் இருக்கும்.
விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டது முதல் விண்வெளியில் பயணிக்கும் வரை அனைத்துக் காட்சிகளும் இதன் மூலம் நேரலையாகவும், பதிவாகவும் சேகரிக்கப்படுகின்றன.
நாசா ஏற்கனவே விண்வெளியில் சோதிக்கப்பட்ட 'Nikon D5 DSLR' கேமராக்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. கதிர்வீச்சு (Radiation) மற்றும் ஈர்ப்பு விசை அற்ற (Zero-gravity) சூழலில் இவை நம்பகத்தன்மையுடன் செயல்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து, புதிய 'Nikon Z9 Mirrorless' கேமராவும் இந்தத் திட்டத்தில் அறிமுகமாகியுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் பயன்படுத்துவதற்காக இந்த கேமராவில் கதிர்வீச்சு எதிர்ப்பு சுற்றுகள் (Radiation-proof circuits), விண்வெளி வீரர்கள் கையுறையுடன் பயன்படுத்த ஏதுவான பிடிமானம் (Grip) மற்றும் வெப்பப் போர்வை (Thermal blanket) போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விண்கலத்தின் சூரியத் தகடு இறக்கைகளில் (Solar array wings) பொருத்தப்பட்டுள்ள 'GoPro' கேமராக்கள், விண்கலத்தின் வெளிப்பகுதி, பூமி மற்றும் நிலவை உயர் தரத்தில் படம் பிடிக்கின்றன.
ஆச்சரியமாக, விண்வெளி வீரர்கள் தங்களது ஐபோன் (iPhone) மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களையும் விண்வெளிக்கு எடுத்துச் செல்ல நாசா அனுமதி அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக 'Orion Artemis II Optical Communications (O2O)' தொழில்நுட்பம் கருதப்படுகிறது.
இது வழக்கமான ரேடியோ அலைகளுக்குப் பதிலாக லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினாடிக்கு 260 Mbps வேகத்தில் தரவுகளை பூமிக்கு அனுப்புகிறது.
இதன் மூலம் நிலவிலிருந்தே 4K தரத்தில் நேரடி ஒளிபரப்பு (Live Streaming) செய்வது சாத்தியமாகியுள்ளது.