மெக்சிகோவை உலுக்கும் இயற்கை சீற்றங்கள்! சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Sulokshi
Report this article
மெக்சிகோவில் பெய்த மிக பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மருத்துவமனைக்குள் புகுந்ததால் 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள டியூலா என்ற நகரத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டியது.
திடீரென பெய்த மிக பலத்த மழையால் அங்குள்ள டியூலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.அபாய அளவை தாண்டி ஓடிய நதி வெள்ளம், ஒரு கட்டத்தில் டியூலா நகருக்குள் புகுந்தது. இதன்போது முக்கிய சாலைகளில் 5 அடிக்கு மேல் பெருக்கெடுத்த வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
டியூலா நகரத்தில் உள்ள மருத்துவமனைக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் மின்சாரம் மற்றும் பிராணவாயு விநியோகம் தடைப்பட்டதனால் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உட்பட 16 நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த மீட்புப் குழுவினர், 40க்கும் மேற்பட்ட நோயாளிகளை மீட்டு பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்ததுடன் மழை சற்று குறைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மெக்சிகோ அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே மெக்சிகோவில் உள்ள குரெரோவின் அகாபுல்கோவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் குரேரோ மாநிலத்தின் அகாபுல்கோவில் இருந்து தென்கிழக்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் மெக்சிகோ நகரம் வரை கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியதாக நில அதிர்வு நிபுணர்கள் மற்றும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அங்கு மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.