கனடிய நகராட்சித் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி
கனடாவில் நகராட்சியொன்றின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார்.
கனடாவின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற நகராட்சி இடைத்தேர்தலில் நீதன் ஷான் என்று அழைக்கப்படும் நீதன் சண்முகராஜா வெற்றியீட்டியுள்ளார். இந்த தொகுதி ரொடொரண்டோ மாநகராட்சியின் ஒர் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் வெற்றி பெற்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
நீதன் சண்முகராஜா 5174 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்பதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட அனு சிறிஸ்கந்தராஜா 3374 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தாம் கடந்த காலங்களில் வழங்கிய சேவையையும் தமது அயராத உழைப்பினையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என நீதன் சண்முகராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த தொகுதியில் ஜெனிபர் மெக்கல்வி நகராட்சி மன்ற உறுப்பினராக கடமையாற்றி வந்தார்.
எனினும் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி ஈட்டிய காரணத்தினால் அந்த நகராட்சி மன்ற உறுப்புரிமை பதவி வெற்றிடமானது.
அதற்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் நீதன் சண்முகராஜா வெற்றியீட்டியுள்ளார். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் அவர் இந்த நகராட்சி மன்ற உறுப்பினர் பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
46 வயதான நீதன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.