நிலமை மோசம்; நேபாள பிரதமர் நாட்டை விட்டு வெளியேறத் திட்டம்?
ஆர்ப்பாட்டக்காரர்கள் நேபாள பிரதமரின் இல்லம், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள், நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்குத் தீ வைத்துள்ளனர்.
நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா சீனா அல்லது தாய்லாந்துக்குச் செல்லத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை
நேபாளத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதிலும், மக்கள் அதை மீறி தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்றம் மற்றும் பிற இடங்களில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் முக்கியமாக “ Gen Z ” தலைமுறை இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக ஊடகத் தடையால் ஆத்திரமடைந்து, ஊழல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காணாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் காத்மாண்டுவைச் சுற்றியுள்ள வீதிகளில் டயர்களை எரித்து எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க, பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தலைநகர் காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.
சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பெரும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து பொலிஸாரின் துப்பாகிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.