இந்தியா-கனடா உறவுகளில் புதிய தொடக்கம் ; ஜி7 உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தை
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போதே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனேடிய புதியபிரதமர் மார்க் கார்னி நேரில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இரு தலைவர்களும், ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சி, மற்றும் இறையாண்மைக்கு மரியாதை ஆகிய அடித்தளக் கொள்கைகளில் உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பின் பின்னணியில், கடந்த ஜூன் 2023-இல் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கைத் தொடர்புபடுத்தி, இந்தியாவை குற்றம் சாட்டிய முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அறிக்கையால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பதற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தியா ஆறு கனேடிய தூதர்களை நாடு கடத்தியது. இருதரப்பும் தங்களது சில ராஜதந்திரிகளை திரும்ப அழைத்தும் இருந்தனர்.
இந்நிலையில், மார்க் கார்னி பொறுப்பேற்ற பிறகு, உறவுகளில் நிலைத்தன்மையை மீட்டெடுக்க இரு நாடுகளும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.