ரொறன்ரோ விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்
ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் புதிய தொழில்நுட்பமொன்று பரீட்சார்த்த அடிப்படையில் அறிமுகம் செய்யப்படுகின்றது.
பயணிகள் வேகமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறவும், விமானங்களில் பயணம் செய்யவும் இந்த தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலத்திரனியல் நுழைவாயில்கள் அல்லது ஈகேட்ஸ்களின் ஊடாக பயணிகள் விரைவாக பிரவேசிக்கவும் வெளியேறவும் முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சார்த்த அடிப்படையில் சில பகுதிகளில் இந்த வகை இலத்திரனியல் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளவும், குடிவரவு மற்றும் சுங்கம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த நுழைவாயில் பயன்படுத்தப்பட உள்ளது.
இலத்திரனியல் நுழைவாயிற்குள் பிரவேசிக்கும் பயணிகள் தங்களது பயண ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையங்களில் காணப்படும் நெரிசல் நிலைமைகளை குறைப்பதற்கு இந்த இலத்திரனியல் நுழைவாயில் உதவும் என எல்லை கட்டுப்பாட்டுப் பிரிவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.