கனடாவில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய ஆய்வுகள் ஆரம்பம்
கனடாவில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் வேளாண் துறைக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத பங்கு வகிக்கும் மேற்கத்திய தேனீக்கள் நோய்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள் காரணமாக கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், மனிடோபா பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் உணவு அறிவியல் பீடத்தின் பூச்சியியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் நூரியா மோர்ஃபின் தலைமையில் விரிவான அறிவியல் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.

தேனீக்கள் தேன் உற்பத்திக்காக மட்டுமல்லாமல், பயிர்களின் மகரந்தச் சேர்க்கை மூலம் கனடா பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான பங்களிப்பை வழங்குவதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன என்று டாக்டர் மோர்ஃபின் தெரிவித்துள்ளார்.
தேனீக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக Varroa destructor என்ற ஒட்டுண்ணி பூச்சி கருதப்படுகிறது. இது தேனீக்களின் உடலில் ஒட்டிக்கொண்டு அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதுடன், Deformed Wing Virus உள்ளிட்ட பல வைரஸ் தொற்றுகள் பரவுவதற்கும் காரணமாகிறது.
இந்த ஒட்டுண்ணி, நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஒன்றோடொன்று இணைந்து தேனீக்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
வெப்பநிலை மாற்றம், ஈரப்பத மாற்றம் உள்ளிட்ட காலநிலைச் சூழல்கள் தேனீக்களின் நோய் எதிர்ப்பு திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் ஆய்வாளர்கள் ஆராயவுள்ளனர்.