இன்று முதல் பிரித்தானியா செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய விதி
பிரித்தானியாவுக்கு விசா இன்றி பயணம் செய்யும் வசதி கொண்ட சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இன்று (25) முதல் தங்களது பயணத்திற்கு முன்னதாக இலத்திரனியல் பயண அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த நடைமுறை சில நாடுகளுக்கு மட்டும் அமுலில் இருந்தது. ஆனால் இன்றையதினம் முதல், விசா தேவையில்லாத நாடுகளைச் சேர்ந்த அனைத்துப் பயணிகளும் இதனைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ETA திட்டம் மிக முக்கியமானது
இந்த அனுமதியைப் பெறுவதற்கு சுமார் 21.50 அமெரிக்க டொலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதேவேளை சுற்றுலா, குடும்ப உறவினர்களைப் பார்க்கச் செல்பவர்கள், குறுகிய கால வணிகப் பயணம் மற்றும் 06 மாதங்களுக்கு உட்பட்ட கல்வி கற்கச் செல்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பிரித்தானியாவில் வசிப்பதற்கான உரிமை கொண்டவர்கள் மற்றும் ஏற்கனவே செல்லுபடியாகும் பிரித்தானிய விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த அனுமதி தேவை இல்லை.
பயணிகள் தங்களது பயணத்திற்கு குறைந்தது 03 நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது 'UK ETA' மொபைல் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எமது எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தவும், நவீனமயமாக்கவும் இந்த ETA திட்டம் மிக முக்கியமானது," என பிரித்தானிய குடிவரவு அமைச்சர் மைக் டெப் தெரிவித்துள்ளார்.
மேலும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பிரித்தானியப் பிரஜைகள், தங்களது பிரித்தானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே பயணம் செய்ய வேண்டும். வெளிநாட்டுக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தினால் அவர்களுக்கும் ETA அல்லது விசா கட்டாயம் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.