புத்தாண்டு தின தாக்குதல் திட்டம் முறியடிப்பு ; அமெரிக்க அதிகாரிகள் அறிவிப்பு
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று “ஐஎஸ்ஐஎஸ்” அமைப்பினால் நடத்தப்படவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, 18 வயது இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை (FBI) தெரிவித்தது.

இந்தத் தாக்குதல் முயற்சியானது நேரடியாக “ஐஎஸ்ஐஎஸ்” பயங்கரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு திட்டமிடப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
"எமது சிறந்த பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" என அதன் பணிப்பாளர் காஷ் படேல் (Kash Patel) தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அந்த இளைஞன், சுமார் ஒரு வருட காலமாக இந்தத் தாக்குதலுக்காகத் திட்டமிட்டு வந்துள்ளதாக அமெரிக்க சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கத்திகள் மற்றும் சுத்தியல்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாக அந்த சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள “ஐஎஸ்ஐஎஸ்” உறுப்பினர் ஒருவருடன் அவர் தொடர்பில் இருந்ததும், கறுப்பு நிற ஆடை அணிந்து சுத்தியல்களால் தாக்குதல் நடத்துமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, "புத்தாண்டு தாக்குதல் 2026" (New Year's Attack 2026) என்ற தலைப்பிலான கையெழுத்துப் பிரதி ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
அதில் 20 பேரை கத்தியால் குத்திக் கொல்லவும், சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கவும் அவர் திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்க முயன்றதாக அவர்மீது தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.