உலகை அச்சுறுத்தும் நீபா வைரஸ் ; இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நீபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதாரப் பிரிவினர் விசேட அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (10) ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வானூர்தி நிலையங்களை மையப்படுத்தி அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இந்தியாவில் நீபா வைரஸ் பரவல் மற்றும் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், எதிர்வரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 4 நாட்களில் மட்டும் 40,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். ஜனவரி மாதத்தில் மட்டும் 277,000 பயணிகள் வருகை தந்துள்ளனர். இது ஒரு சாதனை அளவாகும்.
எனவே, பயணிகளின் வருகை அதிகரித்துள்ள சூழலில் சுகாதார அமைச்சு எதற்கும் தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.