பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது
நாட்டில் பொதுமக்கள் மற்றும் தொழில் நிபுணர்களின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் பாரிய அளவில் கேள்வி எழுந்து உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு ஒன்றில் அரசாங்கத்தையும் பிரஜைகளையும் தொழில் வல்லுனர்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பிரதான கடப்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு தொழில் நிபுணரும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் இன்றி தனது சேவையை சுயாதீனமான முறையில் முன்னெடுப்பதற்கு உரிமை உடையவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பின் மருத்துவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பாரதூரமான சிக்கல்கள் பலவற்றை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் நிபுணர்களின் பாதுகாப்பு என்பனவற்றை உறுதி செய்வதற்கு வலுவான மற்றும் நம்பகமான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டி உள்ளது.