தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா ; வான் எல்லைக்குள் டிரோன் ஊடுருவல்
வடகொரியா, தென்கொரியா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ள நிலையில், எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
வடகொரியாவை மிரட்டும் வகையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தங்கள் வான் எல்லைக்குள் டிரோன்களை அனுப்பி முக்கிய ராணுவ தளங்களை கண்காணித்ததாக தென்கொரியா மீது வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக வடகொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கொரியாவின் டிரோன்கள் எல்லை தாண்டி வந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பறந்ததாக கூறப்பட்டுள்ளது.
அந்த டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள முக்கியமான இடங்களை புகைப்படம் எடுத்ததாகவும் வடகொரியா கூறியுள்ளது.
மேலும் உளவுபார்க்கும் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை தென்கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.