உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரிய ஜனாதிபதி
வடகொரிய ஜனாதிபதி தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடந்தது.
கண்டம் பாயும் ஏவுகணை
இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் பிரதித் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா 'ஹ்வாசொங்-20' எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது. இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய கிம் ஜாங் உன், உக்ரைனில் ரஷ்யாவின் பக்கம் போராடும் வட கொரிய வீரர்களை மறைமுகமாகப் பாராட்டும் வகையில், சர்வதேச நீதிக்காக வெளிநாட்டுப் போர்க்களங்களில் தனது படைகளின் வீரமிக்க போராட்ட உணர்வு அற்புதமானது என்று கூறியுள்ளார்.