ஒன்டாரியோவில் மான் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை
ஒன்டாரியோ வடகிழக்கில் 2022ஆம் ஆண்டில் இடம்பெற்ற சட்டவிரோத மான் வேட்டைக்காக இரு ஆண்களுக்கு மொத்தம் 11,300 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரிவர் வெலி பகுதியைச் சேர்ந்த கரீம் நிக்கோலஸ் ரயான் செயிண்ட்-ஜெர்மெயின் மற்றும் பால் டெஸ்கோட்டோ ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்டர்ஜன் ஃபால்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி மட்லைன் பால் தண்டனை வழங்கினார். அரசுத் தரப்பின் வாதத்தின்படி, 2022 அக்டோபர் 27ஆம் திகதி, இவர்கள் இருவரும் மெக்வில்லியம்ஸ் டவுன்ஷிப்பில் உள்ள லின் க்ரீக் சாலையில் மான் வேட்டையில் ஈடுபட்டபோது, செயிண்ட்-ஜெர்மெயின் ஒரு பெண் மானை சுட்டுக் கொன்றார்.

மான் வேட்டை
அந்த நேரத்தில் அவருக்கு கரடியை வேட்டையாடுவதற்கான அனுமதிப் பத்திரம் மட்டும் இருந்தது; மான் வேட்டைக்கான உரிமம் இல்லை என்று ஒன்டாரியோ இயற்கை வளங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர் பெரிய விலங்குகளுக்கான திறந்த துப்பாக்கி சீசனில் கட்டாயமாக அணிய வேண்டிய ஆரஞ்சு வேட்டையாடும் உடையை அணியவில்லை எனவும் கூறப்பட்டது.
மானை கொன்ற பிறகு, மானை ரிவர் வெலி பகுதிக்கு எடுத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் ஒரு வாரம் கழித்து, செயிண்ட்-ஜெர்மெயின் வாகனத்தை நிறுத்தி, அவரிடமிருந்து சட்டவிரோதமாக விலங்குகளைப் பிடிக்கப் பயன்படும் “கோனிபேர்” எனப்படும் வலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவருக்கு வேட்டையாடும் உரிமமும், வலைவீசும் அனுமதியும் இல்லாதது விசாரணையில் தெரியவந்தது.
இதனால், செயிண்ட்-ஜெர்மெயின் மீது உரிமம் இன்றி மான் வேட்டையாடுதல், சட்டவிரோதமாக கொல்லப்பட்ட விலங்குகளை எடுத்துச் சென்றல், வேட்டையாடும் விதிகளை மீறல், அனுமதி இல்லாமல் வலைகளை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
அவருக்கு மொத்தம் 11,300 டொலர் அபராதமும், ஐந்து ஆண்டுகள் வேட்டையாடும் தடை விதிக்கப்பட்டது.
அவருடன் இருந்த பால் டெஸ்கோட்டோ என்பவருக்கு சட்டவிரோதமாக கொல்லப்பட்ட விலங்குகளை எடுத்துச் சென்ற குற்றத்திற்கு 2,500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.