ஒன்டாரியோவில் காட்டுத்தீ பரவல் தீவிரம்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இன்று மேலும் ஏழு இடங்களில் புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளதால், தற்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீகளின் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
இயற்கை வள அமைச்சு இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. மேகமூட்டமான வானிலை மற்றும் அண்மையில் பெய்த மழை காரணமாக சில பகுதிகளில் தீ பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் நிலைமை இன்னும் மிகவும் ஆபத்தானதாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தண்டர் பே நகருக்குச் சென்று தீயணைப்பு வீரர்கள், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து வளங்களையும் பயன்படுத்த அரசு தயங்காது என்றும், இதற்கான செலவுகளுக்கு எந்த வரம்பும் விதிக்கப்படமாட்டாது எனவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், அல்பர்டா மாகாணத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள், யூகோனிலிருந்து நீர்குண்டு வீச்சு விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களின் உதவிகளும் பெறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
காட்டுத்தீ நெருக்கடியை எதிர்கொள்ள அரசு போதுமான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முதல்வர் ஃபோர்ட் நிராகரித்ததுடன், அவசரநிலையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.
இந்தக் காட்டுத்தீயால் முதன்மையாக பூர்வீக மக்களின் சமூகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிஷ்னாவ்பே அஸ்கி நேஷன் பகுதிகளில் உள்ள பல சமூகங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாகாண அரசின் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக உள்ளதாக அந்த அமைப்பின் தலைமைத் தலைவர் ஆல்வின் ஃபிட்லர் குற்றம்சாட்டியுள்ளார்.