ஜெருசலேமில் ஒரு கன்னியாஸ்திரி மீது தாக்குதல்; சர்வதேச அளவில் பெரும் விவாதம்
தென் லெபனானில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் இயேசுவின் சிலையைச் சேதப்படுத்திய சம்பவம் ஓய்வதற்குள், இஸ்ரேலின் பழைய ஜெருசலேம் பகுதியில் ஒரு கன்னியாஸ்திரி மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் பழைய ஜெருசலேம் பகுதியில் உள்ள ‘மவுண்ட் சீயோன்’ (Mount Zion) அருகே, கடந்த ஏப்ரல் 28, 2026 அன்று மாலை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ
பிரெஞ்சு விவிலிய மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிப் பள்ளியில் (École Biblique) ஆய்வாளராகப் பணிபுரியும் 48 வயதுடைய கன்னியாஸ்திரி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் இருந்து ஓடிவந்த 36 வயதுடைய இஸ்ரேலிய நபர், கன்னியாஸ்திரியைத் தூக்கி ஒரு பாறையின் மீது வீசியுள்ளார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தும் விடாமல், அந்த நபர் அவரை மீண்டும் மீண்டும் எட்டி உதைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், அந்த நபர் தாக்கிவிட்டுச் சில அடிகள் விலகிச் செல்வதும், பின்னர் மீண்டும் திரும்பி வந்து தரையில் விழுந்து கிடந்த கன்னியாஸ்திரியை ஆக்ரோஷமாக உதைப்பதும் பதிவாகியுள்ளது.
அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தடுத்து நிறுத்த முயன்ற பின்னரே அந்த நபர் அங்கிருந்து ஓடியுள்ளார். தாக்குதலில் அந்த கன்னியாஸ்திரியின் முகத்தின் வலது பக்கத்திலும், தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய ஒருவரை இஸ்ரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ஒரு யூத குடியேற்றவாசி (Settler) என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் ஒரு “சமயவெறிச் செயல்” (Sectarian Violence) என்று பிரெஞ்சு விவிலியப் பள்ளியின் இயக்குனர் ஆலிவர் போகுய்லன் கடுமையாகச் சாடியுள்ளார்.
சமீபகாலமாக ஜெருசலேமில் கிறிஸ்துவ மதகுருமார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது துப்புவது, அவமதிப்பது மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எபிரேயப் பல்கலைக்கழகம் கவலை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது இஸ்ரேல் போற்றும் மத சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது. பிரெஞ்சு தூதரகமும் இந்த விவகாரத்தில் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.