எண்ணெய் சந்தையில் திருப்பம் ; குறையப்போகும் பெட்ரோல் - டீசல் விலை?
சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான அராம்கோ நிறுவனம், மார்ச் மாதத்துக்கான ‘அரப் லைட்’ ரக கச்சா எண்ணெயின் விலையை ஒரு பேரலுக்கு 30 சென்ட் குறைத்துள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 0.30 டாலராகவும், இந்திய மதிப்பில் சுமார் 25 ரூபாயாகவும் உள்ளது.
2020ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பின்னர் ஒரே நேரத்தில் இவ்வளவு அளவில் விலை குறைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எதிர்பார்த்த அளவுக்கு பெரிய விலை குறைப்பு அல்லாதபோதிலும், இது உலக எண்ணெய் சந்தையில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த விலை குறைப்புக்கான முக்கிய காரணமாக, உலக சந்தையில் தேவையை விட அதிக அளவில் கச்சா எண்ணெய் கிடைப்பது குறிப்பிடப்படுகிறது. சவுதி அரேபியா பெரும்பாலும் ஆசிய நாடுகளுக்கே அதிகளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது.
2024ஆம் ஆண்டில் சவுதி அரேபியா, சீனாவுக்கு 47.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், தென் கொரியாவுக்கு 29.5 பில்லியன் டாலருக்கும் கச்சா எண்ணெய் விற்பனை செய்துள்ளது.
அதேபோல் ஜப்பானுக்கு 28.7 பில்லியன் டாலருக்கும், இந்தியாவுக்கு 19.6 பில்லியன் டாலருக்கும் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிய நாடுகளே சவுதி அரேபியாவின் முக்கிய சந்தையாக உள்ளன. எனினும், தற்போது ரஷ்யா இந்தியா மற்றும் சீனாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது.
இதேவேளை, அமெரிக்காவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன், உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவிலிருந்து உற்பத்தியை உயர்த்தி உலக நாடுகளுக்கு வழங்கும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலைமை சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்கக்கூடியதாக இருப்பதால், தங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கும் ஆசிய நாடுகளுக்காக விலையை குறைக்கும் முடிவை அராம்கோ எடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சவுதி அரேபியாவின் ஒவ்வொரு முடிவும் உலக சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், சவுதி அரேபியா மாதந்தோறும் நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாகக் கொண்டு பிற நாடுகளும் தங்களது எண்ணெய் விலைகளை தீர்மானித்து வருகின்றன.
இந்த நிலையில், சவுதி அரேபியா விலையை குறைத்துள்ளதால், பிற நாடுகளும் கச்சா எண்ணெய் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, இந்தியாவிற்கும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் குறைவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.