கனடாவில் வீழ்ச்சியடையும் எண்ணெய் விலை
கனடாவின் வலுசக்தி துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பாக நாட்டின் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகவும் பொருளாதார நிபுணர் அமண்டா லேங் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு விடயமாக கருதப்பட்ட இந்த விலை வீழ்ச்சி, "தற்போது ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது" என அவர் வலியுறுத்தினார்.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது
அண்மையில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு எண்ணெய் சந்தையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது உலகளாவிய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினால், அது உலகச் சந்தையில் அதிகப்படியான விநியோகத்தை உருவாக்கி விலைகளை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நகர்வு கனடாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
எண்ணெய் விலை வீழ்ச்சி வாகன சாரதிகளுக்கு எரிபொருள் விலையில் ஓரளவு நிவாரணம் அளிக்கக்கூடும் என்றாலும், இது கனடாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில்,
குறிப்பாக அல்பேர்ட்டா போன்ற வலுசக்தி உற்பத்தியை நம்பியிருக்கும் மாகாணங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.