மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கனேடிய மாகாணம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Okanagan பகுதியில் ஏற்பட்டுள்ள பெரும் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Olalla பகுதியில் மக்களை வெளியேற்றும் ஆணை தற்போதும் அமுலில் உள்ளது. இப்பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீயானது கட்டுக்குள் இல்லை எனவும், மிக வேகமாக வியாபித்துவருவதாகவும் கூறுகின்றனர்.
மட்டுமின்றி, அப்பகுதியில் மக்களுக்கு ஆபத்தான சூழலை இது ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். Olalla பகுதியில் உள்ள 547 குடியிருப்புகளில் மக்கள் முதற்கட்டமாக பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், 1050 குடியிருப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நிர்வாகம் தெரிவிக்கையில், 426 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு வீரர்களை களமிறக்கியுள்ளதாகவும், 15 ஹெலிகொப்டர்கள் மற்றும் 42 வாகனங்களும் அவர்களுக்கு உதவிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது 5,903 ஹெக்டர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளதாகவும், ஆனால் காரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.