ஒன்ராறியோவில் நான்கு வாகனங்கள் மோதி கோர விபத்து: முதியவர் பலி
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள வோட்டர்ஃபோர்ட் நகருக்கு வெளியே, நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட கோர விபத்தில் 77 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
வோட்டர்ஃபோர்ட்டின் வடகிழக்கே விண்ட்ஹாம் வீதி 6 அருகே உள்ள நெடுஞ்சாலை 24 இல் மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வாகனம், பிக்கப் வாகனம், எஸ்.யூ.வி ரக வாகனம் மற்றும் பயணிகள் கார் ஆகிய நான்கு வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட் எட் சஞ்சுக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் பிக்கப் வாகனத்தைச் செலுத்திச் சென்ற நோர்போக் கவுண்டியைச் சேர்ந்த 77 வயதுடைய சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எஸ்.யூ.வி வாகனத்திற்குள் சிக்கியிருந்த சாரதியை தீயணைப்புப் படையினர் போராடி மீட்டு, உயிருக்கு ஆபத்தான படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதே வாகனத்தில் பயணித்த மூன்று சிறுவர்களும் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய வர்த்தக வாகனம் மற்றும் பயணிகள் காரின் சாரதிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து, டவுன்சென்ட் கன்செஷன் 5 மற்றும் டவுன்சென்ட் கன்செஷன் 7 ஆகிய பகுதிகளுக்கு இடையிலான நெடுஞ்சாலை 24 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதால், இந்த வீதி பல மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.