கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த ஓரு குற்றவாளி கைது
கனடாவின் மிகவும் தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பியெரி பிலோஜீனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிலோஜீன் 2021 டிசம்பர் 22 அன்று சார்ல்ஸ்-ஒலிவியர் புஷேர் சவார்ட் என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் நிலை கொலைக்கான குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தார் என மான்ட்ரியால் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே பகுதியில் செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலோஜீனை பிடித்ததாகவும், குறுகிய துரத்தலுக்குப் பிறகு வான்கூவர் போலீசின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டதாகவும் மெட்ரோ வான்கூவர் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து போலி அடையாள ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர். பிலோஜீனுக்கு எதிராக சட்டவிரோத அடையாள ஆவணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர் விரைவில் மான்ட்ரியாலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொலை வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
பிலோஜீன், கனடிய மத்திய அரசாங்கத்தின் BOLO (Be On the Look Out) திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட கனடாவின் மிகுந்த தேடப்பட்ட 25 குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்ற ஆறு கியூபெக் மாகாண குற்றவாளிகளில் ஒருவராவர் என்பது குறிப்பிடத்தக்கது.