மிசிசாகாவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம்: ஒருவர் பலி
மிசிசாகாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டாம்கன் மற்றும் கமாட்டோ வீதிகள் சந்திக்கின்ற பகுதியில் அதிகாலை 4:55 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அந்நபர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளார்.
சந்தேகநபரும் அந்த விருந்துசாரத்தில் கலந்துகொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. காயமடைந்த நபருக்கு பொலிஸார் முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து நடந்த துல்லியமான இடத்தை உறுதிப்படுத்த முடியாதபோதிலும், இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்றும், அந்த நேரத்தில் பார்ட்டி முடியும் தருவாயில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இருந்ததா என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை. "சந்தேகநபர் குறித்து தற்போது வரை தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
எனினும், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் மேலதிக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட நபர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.