கனடாவில் மூன்றில் ஒரு குழந்தை உணவு பாதுகாப்பின்மையால் பாதிப்பு
கனடாவில், உணவு பாதுகாப்பின்மை காரணமாக உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
மக்களுக்கு, தாங்கள் முழுமையாக உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு கிடைக்காத நிலைமையே உணவு பாதுகாப்பின்மை என அழைக்கப்படுகிறது.
அவ்வகையில், கனடாவில் வாழும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 10 மில்லியன் கனேடியர்கள் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. 2021இல் இந்த எண்ணிக்கை 5.8 மில்லியனாக இருந்தது.
மேலும், சுமார் 2.5 மில்லியன் குழந்தைகள் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவுக்காக உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், உணவு வங்கிகள் தடுமாறிவருவதாகவும், பல வீடுகளில் உணவு குறித்த கவலையும், சில குடும்பங்களில், சில வேளை உணவை முழுமையாகவே தவிர்ப்பதும் நடப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.