குறைந்த மற்றும் அதிக சொத்து வரி விகிதங்களைக் கொண்ட ஒன்ராறியோ நகரங்கள்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் மிகக் குறைந்த மற்றும் அதிக சொத்து வரி விகிதங்களைக் கொண்ட ஐந்து நகரங்கள் தொடர்பில் தகவல் தெரியவந்துள்ளன.
Zoocasa என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய நிறுவனமானது, 2021ல் 35 ஒன்ராறியோ நகராட்சிகளுக்கான சொத்து வரி விகிதங்களை பகுப்பாய்வு செய்துள்ளது.
ஒன்ராறியோவில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து ஆண்டுதோறும் செலுத்தப்படும் சொத்து வரி விகிதங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது என Zoocasa வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வீடு வாங்கும் செயல்முறையின் போது சொத்து வரி விகிதங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாத செலவாக பார்க்கப்படுகிறது என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் பின்னாளில், இது பலரையும் சிக்கலில் தள்ளிவிடுகிறது எனவும் Zoocasa நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021ல் மிகக் குறைந்த சொத்து வரி விகிதங்களைக் கொண்ட ஐந்து நகரங்கள் அனைத்தும் கிரேற்றர் ரொறன்ரோ பகுதிக்குள் அமைந்துள்ளதாக Zoocasa நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ரொறன்ரோவில் மிகக் குறைவாக 0.61% சொத்து வரி விகிதத்தைக் கொண்டிருக்கிறது, அதைத் தொடர்ந்து மார்க்கம் 0.63 சதவீதமாக உள்ளது. ரொறன்ரோவில் 1 மில்லியன் டொலர் மதிப்பிலான வீடு வைத்திருக்கும் ஒருவர், அந்த வீட்டிற்கு 6,110.13 டொலர் சொத்து வரி செலுத்த நேரிடும்.
அதே வேளை, விண்ட்சர் பகுதியில் 1 மில்லியன் டொலர் மதிப்பிலான வீடு வைத்திருக்கும் ஒருவர் ஆண்டுக்கு 18,186.68 டொலர் சொத்து வரியாக செலுத்த வேண்டும்.
ரிச்மண்ட் ஹில் மற்றும் வாகன் பகுதிகளில் சொத்து வரி விகிதம் முறையே 0.65% மற்றும் 0.66% என கணக்கிடப்பட்டுள்ளது, மில்டன் பகுதியில் 0.68% ஆண்டுக்கு சொத்து வரியாக செலுத்த நேரிடும். ஆனால், நார்த் பே பகுதியினர் சொத்து வரியாக ஆண்டுக்கு 1.56%, சட்பரியில் உள்ளவர்கள் 1.54 சதவீதமும் செலுத்துகின்றனர்.