உழைக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து உறுதுணையாக இருக்கும் ஒன்ராறியோ!

Shankar
Report this article
ஒன்ராறியோ அரசாங்கம் உழைக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். அத்துடன் ஒன்ராறியோ அரசானது இத்தொற்றுநோய் பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக பரிந்துபேசி வருகிறது எனமாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே ஒன்ராறியோ அரசாங்கம் ஒன்ராறியோ கொரோனா தொழிலாளர் வருமான பாதுகாப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறது.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக வேலையை இழப்பவர்களுக்கு 3 சுகயீன நாட்கள் விடுமுறையை வழங்கும் ஒரேயொரு மாநிலமாக ஒன்ராறியோ விளங்கும்.
மேலும், கனடாவிலேயே போதிய அளவிலான தொற்றுநோய் விடுப்பு காலத்துக்கான ஊதியத்தினை தொழிலாளர்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நோயிலிருந்து மீளும் காலத்துக்கான நிதியில் (CRSB) ஏற்படும் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு எமது அரசாங்கத்தின் இந்நடவடிக்கை வழிசமைக்கிறது.
இக்காலகட்டத்தில் ஒன்ராறியோவில் வசிப்போருக்கு உதவும் பொருட்டு மத்திய அரசு வழங்கும் நிதியுடன் சேர்த்து இரு மடங்கு நிதியினை சுகவீன ஊதிய நாட்களுக்கு நாம் வழங்க முன்வந்துள்ளோம்.
அதாவது, ஒருவர் மத்திய அரசினால் வழங்கப்படும் $500 டொலர்களுடன் இரு மடங்கு நிதியாக வாரத்துக்கு மொத்தம் $1000 டொலர்களையும், தேவைப்படின் 4 வாரங்களுக்கு $4000 டொலர்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய அரசு எமது இத்திட்டத்தினை ஏற்கும் பொருட்டு, இது உடன் மக்கள் பாவனைக்கு கொண்டுவரப்படும்.மத்திய அரசும் அவ்வாறு செய்வதற்கான விருப்பத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அத்துடன் CRSB திட்டம் புதுப்பிக்கப்பட்டவுடன், தகுதியுடையவர்களுக்கு இதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
கொரோனா நோய்ப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எமது மாநில அரசாங்கம் செய்துவரும் அதேவேளையில், மக்களுக்கு போதியளவில் தடுப்பூசிகளை வழங்குதல், நாட்டின் எல்லைக் கட்டுப்பாடுகளில் உள்ள ஓட்டைகளை அடைத்து புதிய தொற்றுக்கிருமிகள் உள்நுழையாது தடுத்தல் போன்றவை மத்திய அரசின் முக்கிய கடமையாகும்.
மேலும் விவரங்களுக்கு www.ontario.ca/COVIDworkerbenefit எனும் இணைய தளத்தைப் பார்வையிடவும், அல்லது 1-888-999-2248 எனும் எண்ணுக்கு அழைக்கவும்.