அமெரிக்காவுக்கு ஆயிரம் புலம்பெயர் மக்களை கடத்திய இந்திய வம்சாவளி கனேடியர்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
கனடாவின் பிராம்டன் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளி கனேடியர் ஒருவர் சுமார் 1,000 புலம்பெயர் மக்களை அமெரிக்காவுக்கு கடத்தியுள்ளதாக புதிய தரவுகளில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய நபர்களிடம் இருந்து கடுமையான தொகையும் அந்த நபர் வசூலித்துள்ளார். அந்த நபர் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கையில், 40 வயதான சிம்ரஞ்சித் "ஷாலி" சிங் என்பவரே, லாரன்ஸ் நதி வழியாக புலம்பெயர் மக்களை அமெரிக்காவுக்கு கடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவர் தொடர்பான நீதிமன்ற விசாரணையில், புலம்பெயர் மக்களை கடத்தியுள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கடந்த புதன்கிழமை அவர் மறுத்தார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் புலம்பெயர் மக்களை கடத்தும் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. ஷாலி சிங் கனடாவில் சட்டவிரோதமாக குடியிருந்து வருபவர் என்பதுடன், அதிகாரிகளிடம் இருந்து தப்புவிக்கவும் கற்றுக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
ஷாலி சிங் பொதுவாக புலம்பெயர் மக்களை கடத்தும் அதே பகுதியில் தான் சமீபத்தில் இரு குடும்பங்கள் சடலமாக மீட்கப்பட்டனர். ஆனால், அந்த இரு குடும்பங்கள் விவகாரத்தில் ஷாலி சிங் தொடர்பு குறித்து அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை.
அமெரிக்காவில் கைதான சில புலம்பெயர் மக்கள், ஷாலி சிங் தங்களிடம் 5,000 முதல் 35,000 டொலர் வரையில் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் மக்கள் கடத்தல் விவகாரத்தில் 2022ல் ஷாலி சிங் மீது குற்றம் சாட்டப்பட்டு கடந்த வாரம் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரையில் ஷாலி சிங் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.