துப்பாக்கி வைத்திருக்க தடை விதிக்கப்பட்டவரிடம் 53 துப்பாக்கிகள் மீட்பு
கனடாவின் டிரெண்ட் லேக்ஸ் (Trent Lakes) பகுதியில், துப்பாக்கிகளை வைத்திருக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த 39 வயதுடைய நபர் ஒருவர், 53 துப்பாக்கிகள் மற்றும் கோகோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8ம் திகதி, டிரெண்ட் லேக்ஸின் பெஸ்ஸி அவென்யூவிலுள்ள ஒரு முகவரியில் தேடுதல் உத்தரவினை அமல்படுத்தச் சென்ற ஒன்டாரியோ மாகாண பொலிஸார், அங்கு சந்தேக நபரைக் கண்டு உடனடியாகக் கைது செய்தனர்.
குறித்த நபரிடம் நடத்திய சோதனையில் கோகோயின் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த வளாகத்திற்குள் நுழைந்து சோதனையிட்ட பொலிஸார், மிகவும் கவனக்குறைவாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு துப்பாக்கியைக் கண்டெடுத்தனர்.
மேலும் நடத்தப்பட்ட தீவிர தேடுதலில், 52 நீள ரகத் துப்பாக்கிகள் பெருமளவிலான தோட்டாக்கள் மற்றும் 5,000 டாலருக்கும் அதிகமான கனேடியப் பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோசுவா ஃபாசெட் என்பவர் மீது, நீதிமன்றத் தடையை மீறி ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.