அமெரிக்கா மீது விதிக்கப்பட்ட வரியை தற்காலிகமாக இடைநிறுத்திய கனடா
அமெரிக்காவுக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்திற்காக விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரிச்சுமை தற்காலிகமாக நீக்குவதாக ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட், இந்த வரி விதிப்பினை இடைநிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லட்னிக், வொஷிங்டனில் நடைபெறும் சந்திப்பில் பங்கேற்குமாறு டக் போர்ட்டிற்கு அழைப்பு விடுத்ததனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாறுபட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளாமல், ஒருவருக்கொருவர் அச்சுறுத்தாமல், இந்த விவகாரத்தை சமரசம் செய்வதே நல்லது," என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனேடிய உலோகம் மற்றும் அலுமினியத்திற்கு தன் வரிகளை இரட்டிப்பாக்குவதாக எச்சரித்த சில மணி நேரங்களுக்கு பின்னர் மின்சாரத்திற்காக 25 வீத கூடுதல் வரியை விதிப்பதாக ஒன்டாரியோ அறிவித்திருந்தது.
"ஒருவர் சமரசமாக நெருங்கி பேச விரும்பும் போது, அவர்களை புறக்கணிக்கக்கூடாது என போர்ட் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (14) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன், கனேடிய நிதியமைச்சர் டொமினிக் லெப்லாங்க் உடன் இணைந்து போர்ட் யு.எஸ்.எம்.சி.ஏ. (USMCA - United States-Mexico-Canada Agreement) வர்த்தக ஒப்பந்தத்தின் மீள் பேச்சுவார்த்தைக்கு கலந்து கொள்ள உள்ளார்.
"நாங்கள் எதற்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. ஒரு நேர்மையான, நியாயமான, மற்றும் இருதரப்புக்கும் பயனுள்ள வர்த்தக ஒப்பந்தம் மட்டுமே எங்களுக்கு தேவையானது," என போர்ட் வலியுறுத்தியுள்ளார்.